Pages

Friday, 6 September 2013

பாரதியின் பாடை

பாரதியின் பாடைக்கு பின்னால் போனவர்களின் எண்ணிக்கை பதினொன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

வாசிப்பு பழக்கமற்ற ஒரு சமூகத்தை தொடர்ந்து வைத்திருக்கும் வித்தைகளைப்பற்றிய தகவல்களை இமயம் அறிந்துகொள்ளாதது இமயத்தின் பிரச்சனையல்ல.


வாசிப்பு பழக்கமுள்ள சமூகத்தில் எழுப்பப்பட வேண்டிய கேள்வியை இமயம் போன்றவர்களிடம் கேட்பது என்ன வகை நேர்காணல்?


(((கேள்வி ஆனந்தவிகடன்  -- ''எழுத்தாளர்களைத் தமிழ் சமூகம் கொண்டாடுவது இல்லை, அவர்களை வசதியாக வாழவைக்கத் தவறிவிட்டது என்று சில எழுத்தாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்களே!''

பதில் இமயம் -- 'எனக்குப் பிடித்திருக்கிறது நான் எழுதுகிறேன். இந்தச் சமூகம் ஏன் என்னை வசதியாக வாழ வைக்க வேண்டும்? மக்கள் இவர்களை வசதியாக வாழவைக்கும் அளவுக்கு அப்படி என்ன எழுத்தில் சாதித்துவிட்டார்கள்?  வள்ளுவன் தொடங்கி பாரதிதாசன் வரை இன்றும் அவர்களுடைய படைப்புகள் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கின்றன.. 'சமகாலத்தில் நம் சமூகம் எப்படி இருந்தது?’ என்பதற்கான ஆவணம்தான் இலக்கியப் படைப்பு. அந்த வகையில் யாருக்கும் இல்லாத பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அதுவே, அவனுக்குக் கிடைத்த ஆகப் பெரிய அங்கீகாரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலப் புலவர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் தமிழ்ச் சமூகம்  இன்றும் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறது. இன்று அப்படியான கொண் டாடத் தகுதியுள்ள படைப்புகளைப் படைத்த வர்கள் இங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள்? தான் வாழும்போதே தன் படைப்புகள் சாவதைப் பார்க்க நேரிடுகிற எழுத்தாளர்களையும் எழுதிய ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே செத்துப்போகிற படைப்புகளை உருவாக்குகிறவர்களையும் எந்தச் சமூகம் கொண்டாடும்? எப்படி வசதியாக வாழ வைக்கும்?'')))

Thursday, 22 August 2013

பின்நவீனத்துவ கழிவறைகள்



நுண்அதிகாரம் செயல்படும் எல்லா வடிவங்களையும் பின்நவீனத்துவம் கேள்விக்குள்ளாக்குகிறது. இலக்கியத்தை உருவாக்கியவர்களும் உழைத்தவர்களும் புனிதப்படுத்தலை அறிந்தோ அறியாமலோ செய்து வந்திருக்கிறார்கள்.

 எழுதுவதற்கான சூழல்கூட புனிதமான இடமாக விவரிக்கப்பட்டது. மென்மையானவனாக சித்தரிக்கப்பட்டவனே கவிஞனாக உலாவந்தான்.

பின்நவீனத்துவதின் அறிமுகத்துக்கு பின்னரே மனநோயாளிகளின் எழுத்துக்களும் விளிம்புநிலை எழுத்துக்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அங்கீகரித்தல் என்பதை அதிகார செயல்பாடாக பார்க்கும் மனப்பக்குவங்கள் அதிசயங்களாகின.

தமிழ்நாட்டு சூழலில் வேகமாக சந்தைப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவம் எழுத்ததிகாரத்தைபற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கவில்லை. பேஸ்புக்கில் எழுதும் பெரும்பாலான பதிவர்கள் நகைச்சுவை சார்ந்தே தங்கள் சிந்தனை முறைகளை நகர்த்தி வந்திருக்கிறார்கள்.

நகைச்சுவை சாராத சிந்தனைமுறைகொண்டவர்கள்  கழிப்பறை கிறுக்கல்களைப்பற்றிய அறிவைப்பெற்றிருப்பது வரவேற்க்கதக்கது.

 அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் எழுத்துக்கள் பெரும்பாலும் சமூகதளங்களிலேயே சாத்தியமாகியிருக்கின்றனவென்பதை நகைச்சுவை சாராத சிந்தனைமுறைகொண்டவர்களுக்கு யார் தெரியப்படுத்துவது. சாக்ரடீஸ் போன்றவர்கள் செய்து வருவது இணைய சூழலை அரசியல்தளங்களாக மாற்றும் காரியத்தைதான்.

 கழிப்பறையில் எழுதுவது மாத்திரம் இலக்கியம் என்று பின்நவீனத்துவம் மணியடிக்குமானால் அதுவொருவகை வறட்டு சிந்தனையாகிவிடும் ஆபத்திருக்கிறது.

Thursday, 15 August 2013

பிச்சைக்கரானின் தந்திரம்

1.1 பிச்சைக்கரானின் தந்திரம். 
1.2 யூதாஸ் ஸ்காரியோத் எழுதியதாக பிச்சைக்காரன்தளத்தில் சிலவரிகளை             வெளியிட்டுள்ளார். 

1.3           மறுப்பு தெரிவித்து சிலவரிகள்.




1.1 யூத மரபுபடி இயேசுவின் சீடர்களால் திருப்பலியை நிறைவேற்றமுடியாது. தற்கால திருப்பலி முறைகள் இயேசுவிற்கு பிறகான கத்தோலிக்கர்களால் உருவாக்கப்பட்ட சடங்கு.
1.2 யூதாஸ் ஸ்காரியோத்தின் செயலால் நிந்திக்கப்பட்டாலும் அவரது எழுத்துக்கள் இன்றளவும் மறைக்கப்பட்டிருக்கவில்லை.
1.3 யூதாஸ்காரியோத்தின் எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டு வால்நட்சத்திரத்தில் தொடராக விரைவில் வரும்.

மிராஸ்லாவ் ஹோலுப்

மொழிபெயர்ப்பு- பிரம்மராஜன்

செக்கஸ்லோவாக்கிய கவிஞர்களில் தனித்தன்மை மிகுந்தவர் மிராஸ்லாவ் ஹோலுப். இரண்டாம் உலகப் போர்க்  காலத்தில் கவிதை எழுதத்தொடங்கிய ஹோலுப் தலை சிறந்த உலக விஞ்ஞானிகளில் ஒருவரும் ஆவார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் அவருடைய ஆரம்பகால உள்வயமான நிலக்காட்சியானது பிக்காஸோவின் Guernica ஓவியத்தின் ஒரு சிறிய மூலையைப் போல இருந்தது. ஜெர்மானியர்களின் கட்டாயவேலை முகாம்க ளிலிருந்தும், போரின் குண்டுகளிலிருந்தும், தப்பித்த கவிஞர்கள் தியோடர் அடோர்னோவின் மிகக் கடுமையான சமன்பாட்டிலிருந்து தப்பிக்க முடியாமல் இருந்தனர். ஹிட்லரால் Auschwitz இல் ஏற்படுத்தப்பட்ட மனிதவதை முகாம்களுக்குப் பிறகு கவிதையே இருக்க முடியாது என்றார் அடோர்னா. இதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு ஒரு மாற்றுக் கவிதைத்திட்டத்தை ஹோலுப் தனக்குத் தானே முன் மொழிந்து கொண்டார்:
”வார்த்தைகளே கிடையாது, மிகக் கூர்மையான, ஸ்தூலமான, சென்று சேரக்கூடிய இரத்தம் ஒழுகும் படிமங்கள்; இதில் ஒரு பகுதி முப்பதுகளில் ஸர்யலிச படிமத்திலிருந்து ஸ்வீகரிக்கப் பட்டது”.
அப்போழுதிருந்த சிவிலியன் கவிதைக்கான Group 42ஐ சேர்ந்த Josef Kainar ஐப் போல கவிதைகள் எழுத விரும்பினார் ஹோலுப். ஆனால் 1948இல் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு சிவிலியன் கவிதையே இல்லாமல் போய்விட்டது. அப்பொழுது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியிருப்பதே அவருடைய மாற்றுக் கவிதைத் திட்டமாக இருந்தது. எனவே ஹோலுப் நவீன இலக்கியத்தில் நுழையும் போது வாயை மூடிக்கொண்டும், பரிசுத்தமான மௌனத்திலும், பிறர் எல்லோரையும்  ஒட்டுமொத்தமாக நம்பிக்கையற்றுப் பார்ப்பவராகவும் நுழைந்தார். அச்சமயத்தில் ஏற்கப்பட்டு வெளியிடப்பட்ட கவிதைகள் ரஷ்ய சோஷலிச யதார்த்தத்தின் வேடத்தை அணிந்திருந்தன. அக்கவிதைகளில் மிகக்குறைந்த அளவே தனிநபர் பற்றிய குறிப்பும், தனி மனித விலகல் அணுகு முறையும் சாத்தியமாக இருந்தன. அப்பொழுது பிரதான நீரோட்டத்தின் கவிதையாக இருந்தவை யதார்த்தத்தை மூடி மறைத்தன. இக்கவிதைகளில் வாழும் மனிதர்களின் சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டு தலைவர்களின் சிலைகளுக்கான சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்பட்டன. இவ்வாறு தன்னிச்சையாக, எந்த விதமான இலக்கியத் திட்டங்களின் உதவியும் இல்லாமல் உள்ளும் புறமுமான அபத்த நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு ஒழுக்கமான சமுதாயத்தில் இலக்கியம் கட்டுக்கு அடங்காததாகவும் தலைமறைவுப் பிரதேசங்களில் வாழ்வதாகவும் மாறுகிறது. இதற்கு மாறாக ஒட்டுமொத்த குழப்பத்தில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் ஒழுங்கு அமைவையும், மதிப்பீடுகளையும் உருவாக்க விரும்புகிறது. அபத்தமான வாழ்நிலைகளில் இலக்கியம் ஒரு அறிவார்த்தமான திட்டத்ததை எடுத்துக் கொள்கிறது. 1947 களின் காலகட்டத்தில் சுவற்றில் கிறுக்கப்பட்டவை முழுமையான கவிதைகளாக இல்லாமல் வெறும் உருவங்களாக இருந்தன. இப்படி எழுதுபவர்களில் முக்கியமானவர் என்று Jiri Kolar என்ற செக்கஸ்லோவாக்கிய கவிஞரை ஹோலுப் குறிப்பிடுகிறார்.
கவிதையையும், அறிவியலையும் ஒருங்கிணைத்த ஐரோப்பிய கவிஞர்களில் முக்கிய இடம் ஹோலுப்பிற்கு உண்டு. ”அறிவியல் உருவாக்குதலும்”, ”கவிதை உருவாக்குதலும்” ஒரே மாதிரியான மனித அனுபவங்கள்தான் என்று நினைப்பவர் ஹோலுப். அவை இரண்டும் ஆரம்பிக்குமிடம், பொதுவாய் வேர் பிடிக்கும் இடம், சிருஷ்டியின் யத்தனமாகத்தான் இருக்கிறது. வரையறை, தூய்மைப்படுத்துதல், நேர்க்கோட்டு விளக்க உரை மற்றும் திறந்தமுனைத்தன்மை ஆகியவை பொதுவாக இருப்பினும் இந்த விஷயங்களில் எந்த அளவிற்கு அறிவியல் வெளிச்சமிட்டு புலப்படுத்திக் காட்டுகிறதோ அதே  அளவிற்கு நிழல்களை இட்டு கவிதைக் கருவை கவிதை மறைத்துவிடுகிறது. கவிதைக்கும், அறிவியலுக்கும் இடையிலான ஒப்புமைக்கு ஒரு உருவத்தைச் சொல்லும் பொழுது ”நல்ல நிலையில் இயங்கும் ஒரு இயந்திரம்” என்று குறிப்பிடுகிறார் ஹோலுப்.
கவிதை பற்றிய மோசமான வரையறை இதுவென்று யாரும் நினைப்பார்களாயின் அவர்களுக்காக William Carlos Williamsஇன் கருத்தை ஹோலுப் நினைவூட்டுகிறார். வில்லியம்ஸின் கருத்துப்படி கவிதை என்பது சொற்களால் செய்யப்பட்ட ஒரு யந்திரமாகும் (the poems is a machine made of words).ஒரு கவிதை உருவாக்கத்தின் போது நிறைய மனோவியல் தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. அதிகபட்ச ஒழுங்கு பற்றிய நினைவுடனும், சுயக்கட்டுப்பாட்டுடனும் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை மண்டைக்குள் இயங்கச் செய்வதற்கு இணையானதாகிறது கவிதை அனுபவம். பிசகுகளும், தவறுகளும் ஏற்படுகின்றன. இவற்றை ஒரு ஆய்வுக்கூடத்தில் மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சோதனையை நடத்திச் செல்லும் பொழுது நிவர்த்தி செய்து விடலாம். ஆனால் கவிதையில் ஏற்படும் தவறுகள் பெரும்பாலும் அது நாசப்படுவதிலும், கைவிடப்படுவதிலுமே சென்று முடிகின்றன. உணர்ச்சிரீதியான, அழகியல்ரீதியான, இருத்தலியல்ரீதியான மதிப்பீடுகள் கவிதைக்கும் அறிவியலுக்கும் ஒன்றாகவே இருக்கின்றன. பிரத்யேகமான மனம் சார்ந்த தீவிரத்தன்மை கவிதையையும் அறிவியலையும் இணைப்பதாக இருக்கிறது.
அறிவியல் துறைகளுக்கு வார்த்தைகள் என்பவை துணைக்கருவியாக மட்டுமே இருக்கின்றன. இதற்கு மாறாக நவீன கவிதையில் வார்த்தைகள் தம் அளவிலேயே ஸ்தூலப் பொருள்களாகின்றன. கவிதை என்பது சொல்லப்பட்ட விஷயமல்ல, மாறாக சொல்லுகிற விதத்தில் விஷயமாகிறது. கலாச்சாரத்திற்கான பொதுவான மொழி இல்லையென்று கருத்து தெரிவித்த Jacob Bronowski பற்றிக் குறிப்பிட்டு ஹோலுப் தன் மாற்றுக்கருத்தை கூறுகிறார்: ”இந்த இல்லாமை என்பது மேலோட்டமானது. நமக்குப் பொதுவான மொழியும், பொதுவான உணர்நுட்பங்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம் எல்லோருமே பொதுவான ஒரு மௌனத்தையே பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.”
ஹோலுப் 1923ஆம் ஆண்டு Pilzen என்ற இடத்தில் ஜெர்மன்- பிரெஞ்சு பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். 1942 ஆம் ஆண்டு பட்ட வகுப்பு முடித்தபின் Pilzen ரயில்வே நிலையத்தில் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்தார். போர் முடிந்த பிறகு பிராக் நகரில் அறிவியலும், மருத்துவஇயலும் படித்து, அறிவியல் வரலாறு மற்றும் தத்துவத்துறைகளில் பயிற்றுவித்தார். Poetry of Every Dayஎன்ற கவிதைக் குழுவில் முக்கியப் பங்கேற்றார். The Fly, Vanishing Lung Syndrome, Interferon போன்ற தொகுதிகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கின்றன.
இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கவிதைகள் யாவும் Vanishing Lung Syndrome (Faber&Faber,1990) என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
vanishing-lung-syndrome_1
இதயமாற்று அறுவை சிகிச்சை
ஒரு மணி நேரம் கழித்து
நெஞ்சில் அதலபாதாளம்
இல்லாமல் போன இதயத்தினால் உருவானது
மனிதர் அனைவரும் மடிந்து போன
மாதிரி நிலக்காட்சியினைப் போல.
சரீரத்திற்கு அப்பாற்பட்ட ரத்த ஓட்டத்தின் ட்ரம்கள்
காதுகளுக்குக் கேட்காத ”புதிய உலக சிம்பொனி”யை
அறிமுகம் செய்கின்றன.
அது ஒரு விமானத்திலிருந்து விழுவதைப் போன்றது,
காற்று மேன்மேலும் குளிர்ச்சியாகியபடி,
தவிர்க்க இயலாத நிலாஒளியில் உறைந்து போகும்வரை,
மேகங்கள் மிக நெருங்கி வர, இடது காலுக்குக்  கீழே,
வலது   காலுக்குக் கீழே
ஒரு மைக்ராஸ்கோப்பில் பார்க்கப்பட்ட நிலக்காட்சி
அதன் சலைகள் எதிர்த்திசையில் துடிக்கும் நுண்ரத்தக்    குழாய்களைப் போல்
வலுவற்ற கைகள் குருதியின் அரசனைப்பற்றிக் கொள்ள
”தேவன் கிடைக்கும் பொழுதே அவனைத் தேடுங்கள்”.
ஏதோ வகையான பிரபஞ்ச அணில்களின் கீச்சொலிகள்
காதுகளில் எதிரொலிக்க
சிரத்தையற்ற வௌவாலின் சவ்வு
நரம்புகளின் இடையே படர
”மாபெரும் இதயங்கள் தம் சொந்தக் குழப்பத்தை ஒலிப்பரப்பச் செய்வது தகுதியற்றது”
ரப்பர் கையுறைகளுடன் துப்புரவு அங்கி அணிந்த
முகமூடிமுகக்  கடவுளுக்கு முன்னால்
அது விமானத்திலிருந்து விழுவதைப் போன்றது
இப்பொழுது அவர்கள் கொண்டுவருகிறார்கள்.
உருகும் ஐஸ்கட்டிகளின் படுக்கையில் பரப்பப்பட்ட
புதிய இதயத்தை
எண்பதாவது பேரழிவுகளின் ஒலிம்பிக்ஸிலிருந்து
ஏதோ ஒரு வெற்றிச் சின்னத்தைப் போல
அட்ரியம் அட்ரியத்துடன்
மகாதமனி மகாதமனியுடன்
தையலிடப்படுகிறது
மூன்று மணி நேர நித்தியத்துவம்
வந்தவண்ணமும் போன வண்ணமுமாய்
மேலும் இதயம் துடிக்கத் தொடங்கும் பொழுது
பச்சை நிற ஒளித்திரையில் வளைவுகள்
செயற்கை ஆடுகளைப் போலக் குதிக்க
அது ஒரு போர்க்களத்தின் முன்மாதிரியாகிறது
அங்கே வாழ்வும் ஆன்மாவும்
சண்டையிட்டுக் கொண்டிருந்தன
இரண்டுமே ஜெயித்து விட்டன.
பக்தி
அவர்கள் எப்பொழுதுமே
பூக்களை நேரடியாக ஜாடிக்குள் வைத்து
அந்த ஜாடியை கூடத்தின் இருண்ட, குளிர்ச்சியான இடத்தில்
பூச்செண்டு நீடித்திருக்கும் பொருட்டு,
வைக்கின்றனர்
அவர்கள் இறந்து விடுகின்றனர்
அந்த சிறிய சாம்பல் தாழிகள் தம் சாம்பலுடன் நிற்கின்றன
கூடத்தில் இருண்ட குளிர்ச்சியான இடத்தில்
ஒரு குருட்டுச் சிலந்தி
அவைகளைப் பார்த்துக் கொள்கிறது, அதன் பொருட்டு. . .
இல்லையென்றால்
இது எல்லாமும் மிகவும் சோகமானதாகிவிடும்.
யோகாசனம்
எல்லாக் கவிதையும் ஏறத்தாழ
ஐந்நூறு டிகிரி செண்டிகிரேட்
கவிஞர்கள் தீப்பற்றுவதில்
மாறுபடுகின்றனர்
எரிசாராயத்தில் நனைக்கப்பட்டவர்கள்
பற்றிக் கொள்கின்றனர் உடனே,
அவர்கள் என்னவாக இருப்பார்கள் அவர்களின் நோயின்றி
அவர்களின் நோயே அவர்களின் ஆரோக்கியம்.
வைக்கோல் வயிறுகள் அவர்கள் எரிகின்றனர்
நீட்ஷேவை அவர்கள் படிப்பதில்லை
உங்களை எது கொல்வதில்லையோ
அது திடப்படுத்துகிறது.
அவர்கள் கனல்கின்றனர்
ஓசையுடன் எரிகின்றனர்
இருப்பினும் ஒரு மோசமான யோகி மட்டுமே
தன் கால்களை
எரியும் கங்குகளில் சுட்டுக் கொள்கிறான்.
எலும்புக் கூடுகள்
பசுமையாகிக் கொண்டிருந்தவர் அனைவரும்
கெட்டிப்பனியாக மாற்றப்படுவர்.
பறக்கத் தயாராக இருந்தவர்கள் எல்லோரும்
La Brea வின் ஓநாய்களைப் போல தார்க்குழிகளில் உறங்கட்டும்
கூவி அழைத்தவர்கள்
பேசப்படாத விளக்க வாக்கியத்தின் இறுதியில் ஒரு ஆச்சரியக்
குறியாக மாற்றப்படட்டும்.
வருடிக் கொண்டிருந்தவர்கள்
முள்ளாள் கிழிக்கப்படட்டும்.
அதனால் பனிக்கு கூடுதலாக இன்னும் சில ஆயிரம்
பைட்டுகள்
அதனால் தாரின் மீது பச்சைப்பாசி உருவாகும்
ஒவ்வொரு பழத்தாங்கியிலும் ஒரு சிறிய ஆடு இருக்கும்படி
அதனால் மௌனம் சிறிது கீச்சொலியிடட்டும்
அதனால் முட்கள் வருந்தக் கூடும்.
பிரான்சிஸ்கோ பிசாரோ
தான் தோற்கடித்தவர்களின் தலைகளை
குச்சிகளில் குத்தி Plaza de Armasவில் காட்சிக்கு வைத்தான்
ஜுன் 26, 1541.
கோடறிகளாலும் போர்வாள்களாலும்
முடமாக்கப்பட்டு இரத்தமிழந்து இறக்க
வெண்ணிற மேல் அங்கியில்
புனித ஜேம்ஸின் சிவப்புச் சிலுவையுடன்
ஒரு அவசர சவச்கிடங்கினால்
தலை வெட்டப்படுவதிலிருந்து தப்பித்தான்.
நிகழ்ச்சி இறுதியில்
நூற்று இருபது வருடங்களுக்கு பிறகு
வகுக்கப்பட்டான்: அவன் மண்டையோடு ஒரு காரியப் பெட்டியிலும்
அவன் எலும்புகள் குழந்தைகளின் எலும்புகளுடனும் கலந்து போய் ஒரு மரச்சவப் பெட்டியில்
நிலவறை ஒன்றில் சூழப்பட்டது சுவர்களால்
திருச்சபையில் முன்னூறு வருடங்களாய்
பாடம் செய்யப்பட்ட வேறொரு சவம்
அவன் பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள்
ஞாபகத்திலிருந்து தொலைந்து போகட்டும்
மீண்டும் ஒவ்வொன்றும் நிகழும்பொருட்டு.
வெண்சஸ்லா சதுக்கம்
டிசம்பர்
இரவு பதினொரு மணி
மௌனத்தின் பனிப்பகைப்படலம் சோடியம் ஒளியால் மெருகிடப்பட்டு பூமியை அணைத்துக்கிடக்கிறது.
குதிரை மீதமர்ந்த இளவரசனின்
வெண்கலக்கண் நடந்து செல்லும் காவல்காரர்களைப்
பின் தொடர்கிறது
இங்குமங்கும் நிழல்வெளிக் கோட்டுருவம்
கடந்து செல்கிறது
சற்றே நிஜமற்றதைப் போன்றது.
ஆனால் தன் இலைகளை உதிர்க்க மறந்த லின்டன் மரத்திலிருந்து
ஒரு கருப்பு பறவையின் வலுவான குரல்.
பாடல் உயர்ந்து சுரங்கப்பாதையில் விழுகிறது.
டிசம்பரின் மனம் பிளவுபட்ட
ஒரே கருப்புப் பறவையின் பாடல்
வலுவான என்றென்றும் நீடித்திருக்கக் கூடியது
ஒரே ஒரு மனம் பிளவுபட்ட கருப்புப் பறவை.
ஆம், வாஸ்தவமாக
ஒரு பாடல்.
நசுங்குதல் பற்றிய நோய்க்கூட்டுத் தொகுப்பு
ஒரு சமயம் அப்பொழுது, குளிர்கால இருட்டில்
கான்க்ரீட் கலவை இயந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தேன்
அதன் பல்சக்கரங்கள் இபடான் தேசத்து சலித்துப் போன எலியின் பற்களைப் போல,
கையுறைக்குள் இருந்த கையை நசுக்கின. விரல் எலும்புகள்
நீங்கள் அடிக்கடி கேட்டிராத சில விஷங்களைக் கூறின
பிறகு அது அமைதியானது,
காரணம் அந்த எலி கூட பீதியடைந்துவிட்டது.
அந்த கணத்தில்
நான் உணர்ந்தேன் எனக்கொரு ஆன்மாயிருந்ததென்று.
அது மிருதுவாகவும், சிவப்பு பட்டைக்கோடுகளுடனும் இருந்தது
மேலும் காயத்திற்கான சல்லடைத் துணியால்
தன்னைச் சுற்றிக் கொள்ள விரும்பியது.
காரின் இருக்கையில் என்னருகே அதை வைத்துக் கொண்டு
ஆரோக்கியமான கையினால் காரைச் செலுத்தினேன்
மருந்தகத்தில் வலி தெரியாதிருப்பதற்கான ஊசிகள்
குத்தப்படும் பொழுதும்
தையலிடப்படும் பொழுதும்
மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய மேஜையின்
துருப்பிடிக்காத எஃகுக் குமிழியினை
ஆன்மா தனது தாடைகளால் இறுகப்பற்றிக் கொண்டது.
இப்பொழுது வெண்ணிறப் படிகமாய் இருந்தது
ஒரு வெட்டுக்கிளியின் தலையுடன்.
விரல்கள் குணமாயின.
ஆன்மா மாறிற்று முதன்முதலில்
ஆறிவரும் புண்ணின் திசுவாக
பிறகு ஒரு வடுவாக,
அதிகம் புலப்படாமல்.

miroslav_holub1923-1998

குட்டை பாவாடையும் குனிந்து விளையாடும் பெண்களும்

துள்ளலில் உயரும் பாவாடையுடன்
நீ விளையாடத்துவங்குகிறாய்

புரண்டெழும் மிருகத்தின் சுவாபங்களுடன்
விழித்தெழுகிறது கடல்

கருகிருட்டில் வீழும் வெண்பறவையாய்
மிருகத்தின் நகங்கள் முளைக்கின்றன

தொலைந்த பயணத்தின் தொலைவை அளவிட
புதிய பயணங்களை துவக்குகிறாய்

ஒருவேளை
நீந்திகடக்க இக்கடல் அனுமதிக்கும்

கடலுக்கும் பயணங்களுக்கும்
உன்னைபோல ஒடுங்கிப்போகும் பாக்கியம் வாய்த்ததில்லை

என்னையும் அலைகளையும்
சிப்பிகள் சேகரிக்கும் குழந்தையாய் மாறிய நீயும்
ஒரு குவளை தேநீருடன் கைநீட்டகூடும்

உன் வீட்டின் கதகதப்பான மூலையில்
நீ தொலைத்த முத்தத்தில்
இடம்பெயர்ந்த குன்னிமுத்துக்களை
சேகரிக்க திரும்பும் பால்யத்தின் நினைவுகளை
அனுப்பமறுத்த வள்ளங்கள்
மணல்வெளியின் கருணையில் துயில்கின்றன

பல்லாங்குழியில் தடுமாறும் காதலை
பல்லாங்குழியின் எதிர்துருவத்திலேயே எதிர்கொள்கிறாய்

உயரதுடித்த அலைகள் மடிந்து பின்வலிகின்றன

சாத்தானின் குழந்தைகள் உன்னோடு பொருதுகின்றன

நீ வரிசைபடுத்திய புகைபடங்களில்
அறியாமையின் திமிர் எட்டிபார்க்கிறது

என் வருகைக்காக தவறவிட்ட உன் இளமையை
கௌவி நீந்தும் மீன்களை

அன்பால் நீ உகுத்த கண்ணீரை உறிஞ்சும் விரால்களை

பத்தாயத்தில் உறங்கும் நம் கடவுளை
இக்கடலுக்குள் கொண்டுவர
நீ உதிர்க்கும் பிரார்த்தனைகளை

களைப்பற்ற தொடர் நீச்சலில்
திணறா சுவாசத்தின் பிடிவாதத்தை

மீன்களின் வயிற்றில்
நெடு உறக்கத்தை துவங்கஇருக்கிற என்னில்

உடைகள் உன் எதிரியைப்போல
துவைத்து எறியும் பந்தின் போக்கில்

யுத்தத்தின் கடைசியில் உடைகளை களைகிறாய்

கேடயங்களில் நீ காயவைத்த உள்ளாடைகள்

வானமும் திசையும் நீங்கா துருவநட்சத்திரமும்
பயணங்களுக்கான திசைகாட்டிகளல்லவென்பதை
தாமதமாக உணரும் உன் புதைவெளி பயணங்கள்

கடித்துபிடித்தபடி தொடரும் மீன்களைபோல
கண்ணாடி பேழைக்குள் நீந்துகிறாய்

உன் சுவாசத்தின் உணர்வில்
மீன்களின் ரத்தவேட்கை படிகிறது

கலங்கரைவிளக்கங்கள் அனுப்புகிற ஒளியில்
உன் வியர்வையின் வசீகரம் கலந்து வருகிறது

வேட்டையாட காத்திருக்கிற மீன்களின்
கண்களில் தெரிகிற வெறிகலந்த ஏளனத்தை

உன் சதைகூடு விசித்திர இரையாக மாறிக்கொண்டிருப்பதை

கடல் விரித்த பொறியிலிருந்து தப்பிக்க
நீரோட்டத்தில் இழுக்கப்படும் அறியாத பயணத்தைபோல

யோனாவின் பேழையில் நிரப்பபட்ட
எனக்கு மறுக்கப்பட்ட இடத்தில்
உதாசீனங்களின் காதலைபோல

புதிய உலகில் பேழையிலிருந்து இறங்கும் உன் பாதங்களில்
முரட்டுபாதரட்சையின் அவசியத்தை

பாவாடைநாடாவில் தொங்கும் மரணதூதர்கள்
விளையாட்டின் விதிமுறைகளை மீறுகையில்

வனாந்தரத்தின் ஒற்றையடி பாதையை
கடல்வெளியில் தேடும் உன் மனஆசைகளை

இரைப்பையில் தங்கிவிட்ட கொடூரபசியை தூண்டுகின்றன
விளையாட்டின் கடைசியில்
நீ பறக்கவிட்ட முத்தங்கள்

குட்டைபாவாடையுடன் குனிந்துவிளையாடும் பெண்கள்
தருவிக்ககூடும்
இக்கடலுக்குள் அமிழ்ந்திடும் உடல்களுக்கான சவப்பெட்டிகளை.
                                                                                                                            -  குருசு.சாக்ரடீஸ்     

அவளுடலை தீண்ட வந்திராத மீன்கள்

                                 நிர்வாணமான பெண்ணின் உடலை கடலில் வீச அவர்களுக்குப் பயிற்சியொன்றும் இருந்திருக்கவில்லை. அவர்கள் பதினேழு பேர் இருந்தார்கள். மீன்பிடிடெக்கில் நின்றுகொண்டிருந்தவர்களைக் கண்டு மிரண்ட வெயில் மட்கத்துவங்கியது. தளதளத்த கடலின் மேனியை கிழித்தபடி நகர்ந்துகொண்டிருந்த தைவானி மீன்பிடிக்கப்பல் ஒரு சாயங்காலத்தை விரட்ட எந்த உபகரணங்களையும் கொண்டிருக்கவில்லை.

அவளுடல் கனத்திருக்கவில்லை. பிடிவாத உயிர் மிச்சமிருந்தது. கடல்நீரின் மகோன்னதக் குணங்கள் அவளது நீண்டகூந்தலை தொடர்ந்து சிதைத்திருந்தன. கூந்தலால் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்த கைகள் தோள்பட்டையிலிருந்து கழன்றுவிடும் சாத்தியம் தெரிந்தது. அவளுடம்பில் வழவழப்பு மறைந்துவிட்டிருந்தது. பரணில் வீசப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பொம்மையின் தோற்றத்தை மிச்சம் வைத்திருந்தாள்.

பதினேழுபேரும் நெடுங்காலக் கடற்கொள்ளையர்களின் தோற்றத்தை அடைந்திருந்தாலும் வேட்டையின் கண்ணியில் தொங்கிகொண்டிருக்கும் மீன்வேட்டையர்களின் குணத்தை மிச்சம் வைத்திருந்தார்கள். பலநாட்டு முகச்சாயல் கொண்ட அவர்களைக் கடலின் முரட்டுமொழி அதிர்ஷ்டத்தின் கண்ணிகளால் பிணைத்திருந்தது. தெற்கத்திய முகமே அதிகமும் தென்பட்டன. அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி கப்பல்கூடத் தைவான் மீனவர்கள் மூழ்கடிக்கக் கொண்டுவந்த நவீனரக டிராலர்தான். நிரந்தரப் படகுகளை அவர்கள் சுமக்கும் வழக்கமில்லை. ஆறுமாத வேட்டை காலத்தில் கிடைத்த படகுகளைப் பயன்படுத்திக்கொள்வதையே விரும்பினார்கள். நிரந்தரப் படகுகளும் நிரந்தர வாழிடங்களும் அவர்களது கனவுகளில் கூட எட்டிப்பார்ப்பதில்லை.

தைவான் மீன்பிடிகப்பலை கைப்பற்றிக் கொள்ளச் சிறிய யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. யுத்தகணத்தில் கொள்ளையர்களில் நான்குபேர் கடலின் அடியில் தமக்கான சமாதியை தேடிப்போனார்கள். கணிக்கஇயலா யுத்தகணத்தில் பொருதிகொண்ட அவர்களை அதிர்ஷ்டமும் துரதிர்ஷடமும் கைவிட்டிருந்தது.

தைவான் மீனவர்களை வதைத்துகொல்லும் திட்டத்தைச் சீட்டுக்குலுக்கி அவர்கள் தேர்வு செய்தார்கள். எதையும் சீட்டுகுலுக்கி தேர்ந்தெடுப்பது அவர்களது வழக்கமென்றாலும் கைப்பற்றிய மீன்பிடிக்கப்பலில் அதற்கான பொருட்கள் இருந்திருக்கவில்லை. அவர்களால் கைவிடப்பட்ட பைபர் படகுகளில் அதற்கான வசதியிருந்தது. தைவான் மீன்பிடிக்கப்பல் யார்டிலிருந்து கிளம்பிய மேனிக்கே இருந்தது. வலைகளை வீச பயன்படுத்தும் ரோப்புகள் டிரம்மிலிருந்து முன்னோர்களால் உருவப்பட்டிருந்தன. மீன்பிடிவலைகளின் துண்டைகூட விட்டுவைத்திராத தைவானியமுன்னோர்களைக் கொள்ளையர்களால் வழிபடமுடியவில்லை. இன்சூரன்ஸிற்காக மூழ்கடிக்கக் கொண்டுவந்திருந்தாலும் மீன்பிடிக்கப்பலின் வெளிப்புற தோற்றத்தை தைவானிகள் சிதைத்திருக்கவில்லை.

அவர்கள் கொண்டுவந்த நான்கு பைபர் படகுகளும் திசை மாறியிருந்தன. பலதிசை நீரோட்டங்களும் முட்டிகொள்ளும் தாமிரா கிரவுண்டில் நீரோட்டத்தின் திசைக்கு படகுகள் இழுபடுவது கவலைகொள்ளும் விஷயமல்ல. வேகமான நீரோட்டமென்றாலும் மேற்புறத்தில் அதைக் காண்பித்திருக்கவில்லை. ஆழ்கடலுக்குப் பொருத்தமான படகுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான தாக்குதலுக்கு அதைப் பயன்படுத்தியிருந்தார்கள். விரிக்கப்பட்ட வலைகளை அறுத்துக்கொண்டு நுழைய பெரும்பயிற்சியுள்ள படகுகள். மீன்பிடி காலங்களில் கொள்ளையிட பைபர் படகுகளே சௌகரியமானவை. திசைக்கொன்றாக வந்து தாக்கவும் தப்பிக்கவும் பயன்படுத்தியதை விட்டுபோகும் மனசை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அதிலொன்றை கைப்பற்ற கடலில் குதித்த கொள்ளையன் சிறிது நேரத்திலேயே மீன்களிடம் கால் ஒன்றை பறிகொடுத்தான். அலறுவதற்கான சந்தர்ப்பத்தை அம்மீன்கள் அவனுக்கு வழங்கியிருக்கவில்லை.

அம்மீன்கள் எவ்வகையைச் சார்ந்ததென்று அறிந்துகொள்ள அவர்கள் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. தாமிரா கிரவுண்டில் பயங்கரக் குணமுள்ள மீன்கள் கிடையாது. வங்காளவிரிகுடாவின் எப்பிரதேசங்களிலும் அம்மீன்கள் அவர்களது கண்களுக்குத் தென்பட்டிருக்கவில்லை. இனப்பெருக்கத்திற்காக இடம்பெயரும் வகையினமல்ல. பெருந்துக்கத்தில் கூட வாழிடங்களைக் கெட்டியாகப் பிடித்தலையும் கோளா வகையைப்போலத் தோன்றின.

அன்றைய உணவிற்காக அவனைக் குதறிக்கொண்டிருந்த மீன்கள் மேற்புறத்தில் தலைக்காட்டாமல் தங்கள் காரியங்களை நடத்தி கொண்டிருந்தன.

அவனை மீட்பதற்கான முயற்சிகளைக் கொள்ளைகுழு எடுத்திருக்கவில்லை. மரணத்திலிருந்து மீட்பதற்கான மருத்துவமுறைகளையொன்றும் அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. சில கடலோடி மருத்துவங்களில் அவர்களுக்கு முறையான பயிற்சியொன்றுமில்லை. சிலவகைக் கடற்பாசிகள் சதைமுறிவுகளைக் குணமாக்குமென்றாலும் துரிதபயன்பாட்டிற்குப் போதுமானவையல்ல. கொப்பளிக்கும் ரத்தத்தைக் கடவுளாலும் நிறுத்தமுடியாதென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

மரண அலறல்களைக் கேட்டுப் பழகியிருந்தார்கள். வழக்கத்திலில்லாத விஷயங்களைக் கடல் பரப்பில் அவர்கள் முயற்சிப்பதில்லை. வேட்டைக்குக் கிளம்பிய சொற்ப நாட்களில் ஐந்துபேரை இழந்திருந்தார்கள். அதிர்ஷ்டம் பின்வாங்கியிருந்தது.

தாமிரா கிரவுண்டில் பெரும்பாலும் இரால்வகைகளே இனப்பெருக்கத்திலிருந்தன. அவைகளுக்குக் கொடூர குணமொன்றுமில்லை. உண்ணத் தோதான அவைகளை மனிதர்களும் சில மீன்வகைகளுமே விரும்பின.

கடலில் இனப்பெருக்கத்திற்கான கிரவுண்டுகள் பல இருந்தனவென்றாலும் மீன்பிடிக்கப்பல்களுக்கு வசதியான இடம் தாமிராகிரவுண்டுதான். கடலின் அடியாழம் வரை வலைகளை விரித்து இழுத்துகொண்டு நகரும் இழுவைகப்பல்களே அக்கிரவுண்டில் மேய்வது வழக்கம். அதிஆழமுள்ள அவ்வெளியில் பல விசித்தரங்களும் இன்சூரன்சிற்காக மூழ்கடிக்கப்பட்ட மீன்பிடிக்கப்பல்களும் இருந்தன.

மூழ்கடிக்கப்பட்ட பொக்கிஷகப்பல்களைக் குறித்த ஆர்வங்கள் அப்பிரதேசத்தின் மீது இருந்திருக்கவில்லை. தாமிரா கிரவுண்டு கடலில் தான் இருந்ததென்றாலும் அது நடைமுறை வாழ்கைக்கு வெளியே இருப்பதாகப் பல கற்பனைகள் உலாவந்தன. மீன்வேட்டை வரைபடங்களில் ஆபத்தற்ற வெளியாகவே குறிக்கப்பட்டிருந்தாலும் வேட்டைக்காலங்களில் திமிறிக்கொண்டிருக்கும் அதன் சுவாபத்தை வரைபடங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கவில்லை.

அப்பெண்ணின் உடலை தாமிராகிரவுண்டில் எறிவதற்கு முன்னால் அவளது கைகளைப் பின்புமாகப் பிணைத்து நீண்ட கூந்தலால் கட்டினார்கள். நீண்ட கூந்தலுள்ள பழங்காலவகையைச் சார்ந்தவளென்றாலும் நவநாகரீக வழக்கங்களின் அடையாளங்களும் அவளுடம்பில் காணக்கிடைத்தன. விசேஷ எண்ணைவகைகளையே கூந்தலுக்குப் பயன்படுத்தியிருந்தாள். துருப்பிடித்த கட்டுகம்பியின் உருவத்தைக் கூந்தல் அடைந்திருந்தது. நீண்ட கூந்தல் வகையினத்தின் கடைசிபெண்ணாக இருந்தாள்.

அந்தரத்தில் வீசி எறியப்பட்ட உடல் கொஞ்சநேரம் காற்றில் மிதந்தது. கப்பலின் மீன்பிடி டெக்கில் நின்ற பதினேழு பேரும் அவ்வுடல் காற்றில் மிதப்பதை சிலகணங்களேனும் ரசித்திருக்கவேண்டும். ஒரு பறவையின் கதியை அடைந்துவிடும் சாத்தியங்கள் அவ்வுடலுக்கு இருந்திருக்கவில்லை. நிலைதடுமாறி கப்பலின் பக்கப்பலகையில் மோதிவிடும் சாத்தியங்களே தென்பட்டன.

நிர்வாண உடல் ஒரு கர்ணத்துக்குத் தயாரானதுபோல் ஆட்டம் கொடுத்தது. அவளுடலில் மிச்சமிருந்த உயிரைப்போலத் தளர்ந்து தண்ணீர் பரப்பை நோக்கி வேகமாக இறங்கியது. எலும்புகள் நொறுங்கிவிடும் வேகத்தை உடல் அடைந்திருந்தது.
அவளுடலின் பாரத்தில் தண்ணீர் வெடித்து வர்ணங்களைத் தூவியது.

அவள் உயிரை மிச்சம்வைத்திருந்தது அவர்களுக்கு வருத்ததைத் தந்திருந்தது. நெடுநேரம் நீடித்திராத வருத்தம் உப்புகாற்றில் கரையத்துவங்கியிருக்கவேண்டும். அவளது உடலை துண்டு துண்டாக வெட்டியெறியவே விரும்பினார்கள். சீட்டுகுலுக்கியதில் அதிர்ஷ்டம் அவள் பக்கமாகத் திரும்பிவிட்டது. அதிர்ஷ்டத்தின் எல்லாப் பக்கங்களையும் அவர்கள் ஆதரிப்பவர்களென்பதால் அவளுடலை சேதப்படுத்தியிருக்கவில்லை.

கணக்கற்ற நாட்களாக அவளுடலின் அங்கங்களைச் சுவைத்திருந்தாலும் அவள் ருசியை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை. அவளது முலைகளில் கடலின் மூர்க்கத்துடன் பதிக்கப்பட்டிருந்த பற்களின் வடுக்கள் எண்ணிக்கையைத் தாண்டிருந்தன. அவளது முனகலுக்கு ஏற்ப கிழிந்திருந்த உதடுகளில் எந்த யாசிப்பும் இருந்திருக்கவில்லை.

அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் நிரம்பிய கடலில் கொள்ளையர்கள் அவளைக் கைவிட்டிருந்தார்கள்.

தொடர் மயக்கத்திலேயே அவளுடல் இருந்துவந்தது. நேரங்காலமற்று ஒரு பெண்ணைப் புணர்வதாகவே அவர்கள் நினைத்திருக்கவேண்டும். ரத்தம் ஒழுகிகொண்டிருந்த யோனியில் கடலின் இரைச்சலை அவர்கள் கேட்டிருக்கவில்லை. மீன்பிடி டெக்கில் உணர்வற்று வெளியேறிய மூத்திரத்தை கழுவிவிட அவர்களுக்கு எந்த வெட்கமும் இருந்திருக்கவில்லை.

அவர்களது கைக்குக் கிடைப்பதற்குமுன் அழகானவளென்று பெயரெடுத்திருந்தாள். கணிக்க இயலாத இளவயது பெண்ணான அவளுடம்பில் தத்தமது அடையாளங்களைப் பதிக்கப் போட்டியிட்டார்கள். அடையாளங்கள் அரூப ஓவியத்தின் அழகையிழந்து குரோதத்தின் வடிவை அடைந்திருந்தன. தறிகெட்ட பாய்ச்சலுக்கு எதிர்ப்பொன்றையும் அவ்வுடல் காண்பிக்கவில்லை.

ஹீக்கிளி ஆற்றின் பொழிமுகத்திலிருந்து அவர்கள் வெளியேறிகொண்டிருந்தபோது சாகர் தீவின் தெற்கில் நடந்த சண்டையில் சிறிய சொகுசு படகிலிருந்து அவளைக் கைப்பற்றியிருந்தார்கள். அவளைச் சோனகஞ்சில் விற்பதற்காகச் சில வியாபாரிகள் அழைத்துபோய்கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்திலிருந்த அவளும் சில உயர்ரக மதுவகைகளும் டின்களில் பதப்படுத்திய உணவுகளும் கொள்ளையில் கிடைத்தன. குடிநீரை சேகரிக்க ஹீக்கிளி பொழிமுகத்துக்குப் போய்விட்டு திரும்பும்பொழுது அதுபோன்ற பெரியவேட்டையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சொகுசுப்படகிலிருந்தவர்கள் எதிர்பொன்றும் காண்பித்திருக்கவில்லையென்றாலும் அதிர்ஷ்டம் வியாபாரிகள் பக்கமிருந்திருக்கவில்லை. கொல்வதற்கு முன் அவளைப்பற்றிய விவரங்களை அவர்கள் சேகரித்திருக்கவில்லை. வியாபாரிகள் மரணபயத்தில் வார்த்தைகளை மறந்திருந்தார்கள். பேசுவதற்கான அவகாசமும் கிட்டவில்லை. சொற்ப நிமிடங்களில் யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மழுங்கிப்போயிருந்தன. குண்டுகள் தீர்ந்த நாட்டுத்துப்பாக்கிகளே கைவசமிருந்தன. வியாபாரியின் தலையைத் துண்டிக்க இருபத்தி எட்டுமுறை மழுங்கிய வாளால் கொள்ளையர்களில் ஒருவன் கொத்திக்கொண்டிருந்தான். போதிய பயிற்சி அவனுக்கு இருந்தபோதிலும் பெரிய மீன்களை வெட்டிவிட்டு அதைச் சாணைபிடிக்க மறந்திருந்தான். சாணைபிடிக்கும் வசதிகளொன்றும் தைவான் மீன்பிடிக்கப்பலில் இல்லாதிருந்தது. கிச்சனிலிருந்த பல ரகக் கத்திகளும் மழுங்கிப்போயிருந்தன.

பல மாதங்களுக்குப் போதுமான டீசல் டாங்குகளில் இருந்தது. மீன்பிடிக்கப்பலின் டீசல் தீரும்வரை பயன்படுத்திவிட்டு இறங்கப்போகும் கரையோரங்களில் எலும்புகூடாகக் கைவிடுவதையே வழக்கத்தில் வைத்திருந்தார்கள். வேட்டைகுணம் நிரம்பிய அவர்கள் உறங்குவது குறைவென்றாலும் படுக்கைவசதி கொண்ட தைவான் மீன்பிடிக்கப்பலை விரும்பவே செய்தார்கள். இன்சூரன்சிற்காக மூழ்கடிக்ககொண்டு வந்திருந்தாலும் பழக்கவழக்கங்களை மாற்றிவிடும் வசதிகளை யாரும் குலைத்திருக்கவில்லை. பழங்காலத் தோற்றத்திலிருந்தாலும் உறுதியான மீன்பிடிக்கப்பலது. தைவானிய செய்நேர்த்தியை கொள்ளையர்களிலொருவன் தொடர்ந்து முணுமுணுத்து அலைந்தான்.

பாரத்தீபின் சந்துபொந்துகளில் தற்காலிக குடும்பங்கள் வாடகைக்குக் கிடைத்துவந்தன. பழந்துணிகளைப்போலச் சுருண்டுகொள்ள இடப்பரப்புள்ள கச்சிதமான வீடுகள். பிக்கலும் பிடுங்கலும் அனாவசிய வார்த்தைகளும் நிரம்பிய பெண்கள் புழங்க தோதான வரவேற்பை வைத்திருந்தார்கள். வேட்டை முடிந்து திரும்புகிறவனைக் குளிர்விக்கப் போதுமான வெப்பத்தை அப்பெண்கள் கைவசம் வைத்திருந்திருக்கவேண்டும். கொள்ளையிட்ட பொருட்களை வாங்கவரும் ஏஜென்றுகள் அப்பெண்களோடு தொடர் நட்பிலிருந்த பரசியத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.

அவள் கைப்பற்றபட்டபோது போதுமான உடைகளை அணிந்திருந்தாள். கல்லூரி மாணவிக்குரிய தோற்றம் தந்திராத அவ்வுடைகளின் நிறம் கொள்ளையர்களுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பளப்பளப்பான கிராமச்சாயல் கொண்ட பட்டுப்பாவாடையை அணிந்திருந்தாள். மேற்புற சட்டையைப் பொதிந்த கோட் அவளை அழகானவளாய்க் காண்பித்தது. பாவாடையினுள் நீண்ட தொடைகளைக் கௌவிக்கொண்டிருந்த கால்சாராயை அவர்கள் அதற்குமுன் கண்டதில்லை. மயக்கத்திலிருந்தாலும் சூடான மூச்சுக்காற்றைப் படரவிட்டாள்.

நடன அரங்கிலிருந்து தூக்கி வரப்பட்டிருக்க வேண்டும். தூக்கி வந்தவர்கள் எந்த நகையையும் அவளிடம் விட்டுவைத்திருக்கவில்லை. அவளது காதுகளிலிருந்த பிளாஸ்டிக் அணிகலனை கொள்ளையர்களிலொருவன் கழற்றிப் பத்திரப்படுத்தினான். தெற்கத்திய நாட்டைச் சேர்ந்த அவனுக்கு அவளைப்போன்ற காதலி இருந்தாள். வடக்கிலிருந்து ஒன்பது டிகிரி முப்பத்தெட்டு மினிட் நாற்பது செகன்றுகளையும் கிழக்கிலிருந்து எழுபத்தெட்டு டிகிரியும் ஐம்பத்தேழு மினிட்டும் பாகைமானியில் திசைவைத்தால் அவனால் காரங்காட்டையும் காதலியையும் அடைந்துவிட முடியும். தென்பகுதிக்குப் போய்ப் பலவருடங்கள் ஆகிவிட்டது. காதலிகுறித்த எண்ணங்கள் தொலைந்திருக்கவில்லை.

கடலோடிகளாய் இருந்தபோதும் கொள்ளையர்களின் தோற்றத்தை அவர்களால் மறைக்க இயலவில்லை. பெரும்பாலும் மீன்பிடிப்படகுகளையே பயன்படுத்திகொண்டிருந்ததால் கடற்படையின் ரடார்களில் அதிகப்பிரசங்கித்தனமான மீன்பிடிக்கப்பல்களைபோல உலவமுடிந்தது. பொதுவே கடல்ப்பரப்பில் கெடுபிடிகளுக்குப் பஞ்சமொன்றுமில்லை.

கொள்ளையடிக்கும் படகுகளின் இன்ஜின்களையும் மீன்பிடி வலைகளையும் வாங்கிகொள்ள விசாகப்பட்டணத்தில் ஏஜென்றுகள் இருந்தார்கள். சொற்ப விலைக்கே பொருட்கள் கைமாறினவென்றாலும் தொழிலில் நாணயமிருந்தது. வேட்டையொழிந்த காலங்களில் ஏஜென்றுகள் தாராள குணங்களைத் திறப்பதுண்டு.

சர்வதேச எல்லை கடந்துவரும் மீன்பிடிக்கப்பல்களைத் தாக்குவதே எளிதாக இருந்தது. எதிர்பற்ற அவர்களைத் தாக்குவதில் எந்தச் சுவாரஸ்யமும் இருப்பதில்லையென்றாலும் பறிகொடுத்த உடமைகளைக் குறித்த முணுமுணுப்பொன்றும் அதிகமாக எழுவதில்லை. வலைவிரித்துத் திணறிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே அவர்கள் தாக்குவது வழக்கம். தைவான் மீன்பிடிக்கப்பலை தாக்க அவர்கள் எந்தவொரு முன்னேற்பாடுகளும் செய்திருக்கவில்லை. நான்குபுறமும் பைபர் படகில் வந்து சூழ்ந்துகொள்ளும்வரை மரணவாதைகள் மீன்பிடிக்கப்பலில் உறங்கிகொண்டிருந்திருக்கவேண்டும். எதிர்பாரா தாக்குதலுக்கு நான்கு பேரை பிணமாக்கிவிட்டுதான் தைவானிகள் அடங்கினார்கள்.

கைவசத்தில் கிட்டும் பொருட்களைப் பங்குபிரிக்கப் பெரும்பாலும் சண்டையிட்டுகொள்வதில்லை. அவளுடைய உள்ளாடைகளைச் சீட்டுக்குலுக்கியே பகிர்ந்துகொண்டார்கள். சீட்டுக்குலுக்கும் சடங்கிற்குப் பிரதான பொருட்களொன்றும் தேவையில்லை. துரதிர்ஷ்டத்தின் கண்ணிகளிலிருந்து விடபடவே தொடர்ந்து சீட்டுகளைக் குலுக்கிகொண்டிருந்தார்கள். எல்லாகட்டத்திலும் அதிர்ஷ்டம் நிரம்பிய ஒருவன் கூட்டத்தில் இருந்துகொண்டிருந்தான்.

சொகுசுப்படகிலிருந்த வியாபாரிகளைப் பரலோகராஜ்யங்களுக்கு அனுப்பிவிட்டுப் படகை பாகம் பாகமாகப் பிரித்து மீன்பிடிக்கப்பலில் ஏற்ற அதிக நேரமொன்றும் எடுத்திருக்கவில்லை. கிடைத்த மதுவகைகளும் போதுமான சுவையுடன் இருக்கவில்லை. சுட்ட மீன்கள் சுண்டகாய்ச்சிய சாராயத்தின் ருசியை அதிகப்படுத்திவிடுவதை அவர்களால் கற்பனை செய்யமட்டுமே முடிந்தது.

அவள் நிர்வாணமாக்கப்பட்டபோது எழுந்த கூச்சலை அவர்களாலேயே சகித்திருக்க முடியவில்லை. அவளைக் கடத்திவந்த சொகுசுபடகிலிருந்த மூவரும் போதுமான போதையை ஏற்றியிருந்தார்கள். அளவுகடந்த போதையால் அவள் தொடர் உறக்கத்திலிருந்தாள். உடலின் வேதனையில் அவள் முனகினாளவென்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. போதையில் எதுவும் அறிந்திருக்கமாட்டாளென்ற நம்பிக்கையிருந்தது. அவளைக் குளிப்பாட்டும் போது விழிப்பாளென்ற நம்பிக்கையைப் பலமுறை பொய்ப்பித்திருந்தாள். பதப்படுத்தப்பட்ட மீனின் கதியை அவள் அடைந்திருக்கவேண்டும்.

காலமற்ற வேட்டையை அம்மீன்கள் கொண்டலைந்தன. ஒரு காலின் பெரும்பகுதி சதைகளைத் தின்றுவிட்டிருந்தன. மீன்கள் ஆவேசத்தையொன்றும் காண்பித்திருக்கவில்லை. ருசித்து உண்ணவும் கூட்டத்திற்கு வழிவிடவும் மீன்கள் பயிற்சி பெற்றிருந்தன. மிகச்சோம்பேறியான மீன்கள் குழந்தை தவழுவதுபோல நரங்கி நீந்தின.

பைபர் படகுகளை இழக்க அவர்களுக்கு விருப்பமில்லாதிருந்தது. அதற்கான முயற்சிகளில் இன்னொருவனையும் பலியிட அவர்களது புத்திசாலித்தனம் தடுத்தது. மீன்கள் கொத்துவதை வேடிக்கைப்பார்க்க அவர்கள் விருப்பங்கொண்டிருக்கவில்லை.

அவனது அலறலுக்கு ஏற்ப தொற்றிக்கொண்டிருந்த பதற்றம் தண்ணீரெங்கும் பரவிக்கொண்டிருந்தது. ரகசியங்களிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மீன்வகைகளைக் குறித்துக் கொள்ளையர்கள் அறிய முயன்றார்கள். கடலின் மறைந்துவிட்ட குணாம்சங்களை மீட்டெடுக்க அம்மீன்கள் முயற்சித்திருக்க வேண்டும்.

மீன்பிடிக்கப்பலை திருப்பி நீரோட்டங்களில் பயணித்துக்கொண்டிருந்த பைபர்படகுகளை மீட்க அவர்கள் காண்பித்த கூத்துகளைக் கண்டு கடல் சிரித்தது. மீன்பிடி டெக்கில் வெட்டுபட்டுகிடந்த தைவானிகளை ஷவலால் கோரி வெளியே எறிந்தார்கள். கடல்பரப்பில் அநாவசியமாக மிதந்துகொண்டிருந்த உடற்பாகங்களை மீன்கள் கண்டுகொள்ளவில்லை.

கொள்ளையர்கள் மறைந்து வாழ தோதாக நீர்விலகிய பவளத்தீவுகள் நிகோபாரின் அருகே இருந்தன. தற்காலிக ஓய்விற்கும் பதுங்கிப்பாயும் வேட்டைகளுக்கும் பவளப்பாறைகள் வசதியை தக்கவைத்திருந்தன. அங்கேயிருந்த நண்டு இன பழங்குடிகளும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. நண்டு இன பழங்குடிகளுக்கு ஆராய்ச்சிகூடங்களில் நல்ல விலை கிடைத்து வந்தது. நண்டு இன பழங்குடிகளைப் பிடித்துபோக வரும் ஏஜென்றுகளின் கப்பல்களை வேட்டையாட கொள்ளையர்கள் கடல்பரப்பெங்கும் பொறிகளை வைத்திருந்தார்கள். மிருககாட்சிசாலைகளில் நண்டு இன பழங்குடிகளின் வித்தைகளைக் காட்சிபடுத்த முயற்சித்துகொண்டிந்த குழுக்கள் வந்துபோன கப்பல்கள் கசியவிட்டிருந்த எண்ணைபிசுக்குகள் பவளப்பாறைகளில் மினுமினுப்பை ஏற்றியிருந்தது. எண்ணைபிசுக்களை உறிஞ்சிவிடும் பாசிகள் தென்கடலில் இருந்தன.

நண்டு தீவுகள் அந்தமானுக்கு வடக்கே பர்மாவின் கடலோர கால்மாட்டிற்குத் தென்மேற்கே இருந்தன. நண்டுகளின் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்த பழங்குடிகள் நீர் சூழும் காலங்களில் பாறை மாற்ற பெருங்கூட்டமாக வெளியே வருகிறபோது வேட்டைக்கு வாய்ப்பிருந்தது. சரக்குகப்பல்களின் நீர்தடங்களுக்கு வெளியே வெகுதொலையில் நண்டுதீவுகள் இருந்தன. வடக்கிலிருந்து பதினைந்து டிகிரி நாற்பத்தியொன்று மினிட்டுகளும் கிழக்கிலிருந்து எண்பத்தி ஒன்பது டிகிரி முப்பத்தி ஏழு மினிட்டுகளையும் பாகைமானியில் யாரும் வைத்தால் நண்டு தீவருகே சுற்றியலையும் கொள்ளையர்களின் வாயில்போய் விழவேண்டியிருக்கும். நண்டுஇன பழங்குடிகளைப் பிடிக்கவரும் ஏஜென்றுகளுக்குக் கொள்ளையர்களைத் தெரிந்தேயிருந்தது. தற்காப்பு ஆயுதங்களின் முன் கொள்ளையர்கள் நடனமிடவே செய்தார்கள். உயிரை மிச்சப்படுத்தவும் வழியற்ற வெறிகொண்ட யுத்தங்களை யாரும் விரும்புவதில்லை. வேட்டை எல்லாப் பக்கங்களிலும் மரணச்சுவையுடன் அலைந்தது. திசைமாறும் டாங்கர்களைக் கொள்ளையர்கள் நெருங்குவதில்லையென்றாலும் அவைகள் அடிக்கடி திசைமாறின. கொள்ளையர்களை நோட்டமிட சாத்தியமற்ற டாங்கர்கள் கசியவிடும் எண்ணையை மோப்பம்பிடித்து ஆராய்ச்சிபடகுகள் வந்துவிடுவதுண்டு.

தைவான் மீன்பிடிக்கப்பலில் இருந்த ரடார் செயலற்றுப் போயிருந்தது. உயிர் மிச்சமிருந்த எக்கோசவுண்டரின் உதவியுடன் மீன்களின் நடமாட்டத்தைக் கணிக்கமுடியவில்லை. அவ்வகை மீன்களைத் தாமிரா கிரவுண்டில் அதற்கு முன் யாரும் கண்டிருக்கவில்லை. இரால்கள் குஞ்சுபொரிக்கும் காலங்களில் வந்துபோகும் மீன்களாயிருக்கலாம். பருவசுழற்சி கடலின் நிரோட்டங்களை அடிக்கடி மாற்றிவிடுகிறது. நீரோட்டத்தில் இடம்பெயரும் மீன் இனம்போலத் தோற்றம் தந்திராத அவைகளைக் கண்டுகொண்டிருக்கக் கொள்ளையர்களுக்குத் துளியும் விருப்பமில்லை. அவன் முழுதாகச் சிதையுமுன்னே மீன்பிடிக்கப்பலை திசைமாற்றியிருந்தார்கள்.

தைவான் மீன்பிடிக்கப்பலின் விஹச்எப் ரேடியோ உயிரோடிருந்தபோதும் யாரும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. தைவானிகளைக் குறித்த அக்கறை கரையிலிருந்தவர்களுக்கும் இருந்திருக்கவில்லை. தகவலற்ற விஹச்எப் ரேடியோ தைவானிகளின் மேல் இனம்புரியாத பாசத்தைக் கசியவிட்டது. கொள்ளையர்களிலொருவன் பல வித்தைகளையும் விஹச்எப் ரேடியோவின் மேல் பிரயோகித்துப் பார்த்தான். சுக்குநூறாக்கப்பட்ட விஹச்எப் ரேடியோ கடலில் எறியப்பட்டதை மீன்பிடிக்கப்பலின் சுக்கானை இயக்கிகொண்டிருந்த இரவுகடவுள்கூட அறிந்திருக்கவில்லை. மூழ்கடித்த கப்பல்குறித்த தகவல்களைக் கசியவிடும் வழக்கத்தை கொள்ளையர்கள் வைத்திருந்தார்கள். தைவானிகளுக்கு அப்பாக்கியம் கிட்டியிருக்கவில்லை. தைவான் மீன்பிடிகப்பலில் இருந்த பொருட்கள் தந்த ஆசுவாசம் எல்லாவற்றையும் மறக்கவைத்தது.

மீன்பிடிபொருட்களையெல்லாம் தைவானிகள் ஏற்கெனவே காயலான்கடைக்குப் போட்டிருந்தார்கள். இன்ஜின் ரூமில் யாரும் கைவைத்திருக்கவில்லை. இரண்டு ஜெனரேட்டர்களும் நல்லநிலையிலேயே இருந்தன. மீன்களைப் பதப்படுத்தும் கூலர்களும் உயிரோடு இருந்தன. மெயின் இன்ஜினை பாகம்பாகமாகத்தான் பிரித்து வெளியே கொண்டுபோகமுடியும். செயின்பிளாக் வைத்து தூக்கிவிட வாய்ப்புண்டென்றாலும் இன்ஜின் ரூமை உடைக்கவேண்டியிருக்கும். நெடுங்காலக் கடலோடிகளின் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள். இன்ஜினை கூல் செய்ய வைக்கப்பட்டிருந்த பம்புகளே பெருந்தொகைக்குப் போகும். ஆறுமாதங்களுக்கு விற்றுதின்ன போதுமான புரபெல்லர் ராடு மரணபயங்களை விரட்டியிருந்தது. ராட்சஸ புரபெல்லரில் கொள்ளையர்கள் முகம் பார்த்துகொள்ளுமளவு பிரகாசத்தைத் தண்ணீரிலிருந்தபடி காண்பித்துகொண்டிருந்தது. உட்புறங்களில் தவிர்க்கஇயலா நீர்கசிவுகள் இருந்தன. ரசனையுள்ள யார்டில் போனால் அவைகளை ரிப்பேர் செய்துவிட முடியும்.

உறங்க சௌகரியமுள்ள கேபின் இருந்தது. மிகசிறிய கிச்சனில் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கழுவப்பட்டிராத ஸிங்கும் சில காஸ் சிலிண்டர்களும் தென்பட்டன. நண்டுஇன பழங்குடிகளைப் போல மீன்களைப் பச்சையாக உண்ண கொள்ளையர்கள் பழகியிருக்கவில்லை. வெண்ணைத் தடவிய அரைவேக்காட்டு மீன்களை மரணத்தின் முன் உண்ண தைவானிகள் விட்டுபோயிருந்தார்கள்.

மூழ்கடிக்கக் கொண்டுவரப்பட்ட தைவான் கப்பலில் இருந்தவர்கள் எதற்காக யுத்தத்தைத் துவக்கினார்களென்பதை கொள்ளையர்களால் கணிக்கமுடியவில்லை. உயிர்பயத்தின் துவக்கத்திலேயே யுத்தத்தில் குதிப்பது முறையல்ல. நெறியற்ற யுத்ததந்திரத்தின் முன் தைவானிகளின் உடற்பாகங்களே எஞ்சின. தைவானிகள் கொடூரசாவை குறித்து அறிந்தேயிருந்தார்கள். ஆயுதம் தீர்ந்துவிட்ட நிலையிலும் யுத்தம்செய்த அவர்களைக் கண்டு கொள்ளையர்களுக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

மீன்பிடி டெக்கில் அவளுடலை தொடர்ந்து வைத்திருக்கும் விருப்பம் வடியத்துவங்கியது. சீட்டுக்குலுக்கலில் பிழைத்த உயிரை மீன்களுக்கு ஊட்ட முயற்சித்தார்கள். அம்மீன்கள் தாமிரா கிரவுண்டிலேயே நிரந்தரமாகியிருக்கவேண்டும். மாறிவிட்டிருந்த நீரோட்டத்தின் முகங்களை நீர்ப்பரப்பு அறிவித்திருக்கவில்லை. சதையுண்ண காத்திருக்கும் மீன்கள் பதுங்கிய இடம் எக்கோசவுண்டருக்கு தெரிந்திருக்கவில்லை. எக்கோசவுண்டர் பச்சோந்திபோலக் காலை வாரியிருந்தது. மின்னணுப்பொருட்களோடு அவர்களுக்குப் போதுமான பயிற்சியுண்டென்றாலும் பதட்டம் சகோதரனைப்போல முன்நின்றது. தாமிரா கிரவுண்டு முழுவதும் பரவிய எக்கோசவுண்டரின் அலைகற்றைக்கு வெளியே மீன்கள் இருந்தன. சீட்டுகுலுக்கலில் தப்பிக்கும் அதிர்ஷ்டத்தின் உயிரை மீன்கள் விரும்பின.

கூந்தலால் அவளது கைகள் கட்டப்பட்டிருந்தாலும் வீசப்பட்ட வேகத்தில் கடலின் அடிப்பரப்பு வரை போய்விட்டு மேலே வந்திருந்தாள். போதம் தெளிந்திராத அவளுடல் கடலை கிழித்தபடி தண்ணீர் பரப்பிற்கு ஏறியிருந்தது. கொள்ளையர்களின் ஆச்சரிய முணுமுணுப்புகள் கடற்சாபத்தின் தன்மையை அடைந்திருந்தன. அவளது நுரையீரல்களில் தண்ணீர் ஏறியிருந்தாலும் மருத்துவ விதிகளுக்கு உட்படாமல் சுவாசித்துக்கொண்டிருந்தாள். சீழ்கையடித்து மீன்களைத் தருவிக்கும் முயற்சிகள் பலித்திருக்கவில்லை. கொள்ளையர்களின் சீழ்கை ஒலிக்கு புதிய அலைகளை எழுப்பும் சாத்தியமிருந்தாலும் மீன்களை வசீகரிக்கப் போதுமானதாயில்லை. கால்களை அகட்டியபடி மிதக்கும் அவளுடலை சபித்தபடி தாமிராகிரவுண்டிலிருந்து அவர்கள் விலகிக்கொண்டிருந்தார்கள். வெகுதூரம் வந்தபின்னும் அவளுடல் கொள்ளையர்களின் முன்னில் மிதந்துகொண்டிருந்தது. அவளுடலை தீண்ட எந்த மீன்களும் வந்திருக்கவில்லை. -  குருசு.சாக்ரடீஸ்