Pages

Thursday, 15 August 2013

மிராஸ்லாவ் ஹோலுப்

மொழிபெயர்ப்பு- பிரம்மராஜன்

செக்கஸ்லோவாக்கிய கவிஞர்களில் தனித்தன்மை மிகுந்தவர் மிராஸ்லாவ் ஹோலுப். இரண்டாம் உலகப் போர்க்  காலத்தில் கவிதை எழுதத்தொடங்கிய ஹோலுப் தலை சிறந்த உலக விஞ்ஞானிகளில் ஒருவரும் ஆவார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் அவருடைய ஆரம்பகால உள்வயமான நிலக்காட்சியானது பிக்காஸோவின் Guernica ஓவியத்தின் ஒரு சிறிய மூலையைப் போல இருந்தது. ஜெர்மானியர்களின் கட்டாயவேலை முகாம்க ளிலிருந்தும், போரின் குண்டுகளிலிருந்தும், தப்பித்த கவிஞர்கள் தியோடர் அடோர்னோவின் மிகக் கடுமையான சமன்பாட்டிலிருந்து தப்பிக்க முடியாமல் இருந்தனர். ஹிட்லரால் Auschwitz இல் ஏற்படுத்தப்பட்ட மனிதவதை முகாம்களுக்குப் பிறகு கவிதையே இருக்க முடியாது என்றார் அடோர்னா. இதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு ஒரு மாற்றுக் கவிதைத்திட்டத்தை ஹோலுப் தனக்குத் தானே முன் மொழிந்து கொண்டார்:
”வார்த்தைகளே கிடையாது, மிகக் கூர்மையான, ஸ்தூலமான, சென்று சேரக்கூடிய இரத்தம் ஒழுகும் படிமங்கள்; இதில் ஒரு பகுதி முப்பதுகளில் ஸர்யலிச படிமத்திலிருந்து ஸ்வீகரிக்கப் பட்டது”.
அப்போழுதிருந்த சிவிலியன் கவிதைக்கான Group 42ஐ சேர்ந்த Josef Kainar ஐப் போல கவிதைகள் எழுத விரும்பினார் ஹோலுப். ஆனால் 1948இல் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு சிவிலியன் கவிதையே இல்லாமல் போய்விட்டது. அப்பொழுது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியிருப்பதே அவருடைய மாற்றுக் கவிதைத் திட்டமாக இருந்தது. எனவே ஹோலுப் நவீன இலக்கியத்தில் நுழையும் போது வாயை மூடிக்கொண்டும், பரிசுத்தமான மௌனத்திலும், பிறர் எல்லோரையும்  ஒட்டுமொத்தமாக நம்பிக்கையற்றுப் பார்ப்பவராகவும் நுழைந்தார். அச்சமயத்தில் ஏற்கப்பட்டு வெளியிடப்பட்ட கவிதைகள் ரஷ்ய சோஷலிச யதார்த்தத்தின் வேடத்தை அணிந்திருந்தன. அக்கவிதைகளில் மிகக்குறைந்த அளவே தனிநபர் பற்றிய குறிப்பும், தனி மனித விலகல் அணுகு முறையும் சாத்தியமாக இருந்தன. அப்பொழுது பிரதான நீரோட்டத்தின் கவிதையாக இருந்தவை யதார்த்தத்தை மூடி மறைத்தன. இக்கவிதைகளில் வாழும் மனிதர்களின் சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டு தலைவர்களின் சிலைகளுக்கான சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்பட்டன. இவ்வாறு தன்னிச்சையாக, எந்த விதமான இலக்கியத் திட்டங்களின் உதவியும் இல்லாமல் உள்ளும் புறமுமான அபத்த நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு ஒழுக்கமான சமுதாயத்தில் இலக்கியம் கட்டுக்கு அடங்காததாகவும் தலைமறைவுப் பிரதேசங்களில் வாழ்வதாகவும் மாறுகிறது. இதற்கு மாறாக ஒட்டுமொத்த குழப்பத்தில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் ஒழுங்கு அமைவையும், மதிப்பீடுகளையும் உருவாக்க விரும்புகிறது. அபத்தமான வாழ்நிலைகளில் இலக்கியம் ஒரு அறிவார்த்தமான திட்டத்ததை எடுத்துக் கொள்கிறது. 1947 களின் காலகட்டத்தில் சுவற்றில் கிறுக்கப்பட்டவை முழுமையான கவிதைகளாக இல்லாமல் வெறும் உருவங்களாக இருந்தன. இப்படி எழுதுபவர்களில் முக்கியமானவர் என்று Jiri Kolar என்ற செக்கஸ்லோவாக்கிய கவிஞரை ஹோலுப் குறிப்பிடுகிறார்.
கவிதையையும், அறிவியலையும் ஒருங்கிணைத்த ஐரோப்பிய கவிஞர்களில் முக்கிய இடம் ஹோலுப்பிற்கு உண்டு. ”அறிவியல் உருவாக்குதலும்”, ”கவிதை உருவாக்குதலும்” ஒரே மாதிரியான மனித அனுபவங்கள்தான் என்று நினைப்பவர் ஹோலுப். அவை இரண்டும் ஆரம்பிக்குமிடம், பொதுவாய் வேர் பிடிக்கும் இடம், சிருஷ்டியின் யத்தனமாகத்தான் இருக்கிறது. வரையறை, தூய்மைப்படுத்துதல், நேர்க்கோட்டு விளக்க உரை மற்றும் திறந்தமுனைத்தன்மை ஆகியவை பொதுவாக இருப்பினும் இந்த விஷயங்களில் எந்த அளவிற்கு அறிவியல் வெளிச்சமிட்டு புலப்படுத்திக் காட்டுகிறதோ அதே  அளவிற்கு நிழல்களை இட்டு கவிதைக் கருவை கவிதை மறைத்துவிடுகிறது. கவிதைக்கும், அறிவியலுக்கும் இடையிலான ஒப்புமைக்கு ஒரு உருவத்தைச் சொல்லும் பொழுது ”நல்ல நிலையில் இயங்கும் ஒரு இயந்திரம்” என்று குறிப்பிடுகிறார் ஹோலுப்.
கவிதை பற்றிய மோசமான வரையறை இதுவென்று யாரும் நினைப்பார்களாயின் அவர்களுக்காக William Carlos Williamsஇன் கருத்தை ஹோலுப் நினைவூட்டுகிறார். வில்லியம்ஸின் கருத்துப்படி கவிதை என்பது சொற்களால் செய்யப்பட்ட ஒரு யந்திரமாகும் (the poems is a machine made of words).ஒரு கவிதை உருவாக்கத்தின் போது நிறைய மனோவியல் தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. அதிகபட்ச ஒழுங்கு பற்றிய நினைவுடனும், சுயக்கட்டுப்பாட்டுடனும் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை மண்டைக்குள் இயங்கச் செய்வதற்கு இணையானதாகிறது கவிதை அனுபவம். பிசகுகளும், தவறுகளும் ஏற்படுகின்றன. இவற்றை ஒரு ஆய்வுக்கூடத்தில் மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சோதனையை நடத்திச் செல்லும் பொழுது நிவர்த்தி செய்து விடலாம். ஆனால் கவிதையில் ஏற்படும் தவறுகள் பெரும்பாலும் அது நாசப்படுவதிலும், கைவிடப்படுவதிலுமே சென்று முடிகின்றன. உணர்ச்சிரீதியான, அழகியல்ரீதியான, இருத்தலியல்ரீதியான மதிப்பீடுகள் கவிதைக்கும் அறிவியலுக்கும் ஒன்றாகவே இருக்கின்றன. பிரத்யேகமான மனம் சார்ந்த தீவிரத்தன்மை கவிதையையும் அறிவியலையும் இணைப்பதாக இருக்கிறது.
அறிவியல் துறைகளுக்கு வார்த்தைகள் என்பவை துணைக்கருவியாக மட்டுமே இருக்கின்றன. இதற்கு மாறாக நவீன கவிதையில் வார்த்தைகள் தம் அளவிலேயே ஸ்தூலப் பொருள்களாகின்றன. கவிதை என்பது சொல்லப்பட்ட விஷயமல்ல, மாறாக சொல்லுகிற விதத்தில் விஷயமாகிறது. கலாச்சாரத்திற்கான பொதுவான மொழி இல்லையென்று கருத்து தெரிவித்த Jacob Bronowski பற்றிக் குறிப்பிட்டு ஹோலுப் தன் மாற்றுக்கருத்தை கூறுகிறார்: ”இந்த இல்லாமை என்பது மேலோட்டமானது. நமக்குப் பொதுவான மொழியும், பொதுவான உணர்நுட்பங்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம் எல்லோருமே பொதுவான ஒரு மௌனத்தையே பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.”
ஹோலுப் 1923ஆம் ஆண்டு Pilzen என்ற இடத்தில் ஜெர்மன்- பிரெஞ்சு பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். 1942 ஆம் ஆண்டு பட்ட வகுப்பு முடித்தபின் Pilzen ரயில்வே நிலையத்தில் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்தார். போர் முடிந்த பிறகு பிராக் நகரில் அறிவியலும், மருத்துவஇயலும் படித்து, அறிவியல் வரலாறு மற்றும் தத்துவத்துறைகளில் பயிற்றுவித்தார். Poetry of Every Dayஎன்ற கவிதைக் குழுவில் முக்கியப் பங்கேற்றார். The Fly, Vanishing Lung Syndrome, Interferon போன்ற தொகுதிகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கின்றன.
இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கவிதைகள் யாவும் Vanishing Lung Syndrome (Faber&Faber,1990) என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
vanishing-lung-syndrome_1
இதயமாற்று அறுவை சிகிச்சை
ஒரு மணி நேரம் கழித்து
நெஞ்சில் அதலபாதாளம்
இல்லாமல் போன இதயத்தினால் உருவானது
மனிதர் அனைவரும் மடிந்து போன
மாதிரி நிலக்காட்சியினைப் போல.
சரீரத்திற்கு அப்பாற்பட்ட ரத்த ஓட்டத்தின் ட்ரம்கள்
காதுகளுக்குக் கேட்காத ”புதிய உலக சிம்பொனி”யை
அறிமுகம் செய்கின்றன.
அது ஒரு விமானத்திலிருந்து விழுவதைப் போன்றது,
காற்று மேன்மேலும் குளிர்ச்சியாகியபடி,
தவிர்க்க இயலாத நிலாஒளியில் உறைந்து போகும்வரை,
மேகங்கள் மிக நெருங்கி வர, இடது காலுக்குக்  கீழே,
வலது   காலுக்குக் கீழே
ஒரு மைக்ராஸ்கோப்பில் பார்க்கப்பட்ட நிலக்காட்சி
அதன் சலைகள் எதிர்த்திசையில் துடிக்கும் நுண்ரத்தக்    குழாய்களைப் போல்
வலுவற்ற கைகள் குருதியின் அரசனைப்பற்றிக் கொள்ள
”தேவன் கிடைக்கும் பொழுதே அவனைத் தேடுங்கள்”.
ஏதோ வகையான பிரபஞ்ச அணில்களின் கீச்சொலிகள்
காதுகளில் எதிரொலிக்க
சிரத்தையற்ற வௌவாலின் சவ்வு
நரம்புகளின் இடையே படர
”மாபெரும் இதயங்கள் தம் சொந்தக் குழப்பத்தை ஒலிப்பரப்பச் செய்வது தகுதியற்றது”
ரப்பர் கையுறைகளுடன் துப்புரவு அங்கி அணிந்த
முகமூடிமுகக்  கடவுளுக்கு முன்னால்
அது விமானத்திலிருந்து விழுவதைப் போன்றது
இப்பொழுது அவர்கள் கொண்டுவருகிறார்கள்.
உருகும் ஐஸ்கட்டிகளின் படுக்கையில் பரப்பப்பட்ட
புதிய இதயத்தை
எண்பதாவது பேரழிவுகளின் ஒலிம்பிக்ஸிலிருந்து
ஏதோ ஒரு வெற்றிச் சின்னத்தைப் போல
அட்ரியம் அட்ரியத்துடன்
மகாதமனி மகாதமனியுடன்
தையலிடப்படுகிறது
மூன்று மணி நேர நித்தியத்துவம்
வந்தவண்ணமும் போன வண்ணமுமாய்
மேலும் இதயம் துடிக்கத் தொடங்கும் பொழுது
பச்சை நிற ஒளித்திரையில் வளைவுகள்
செயற்கை ஆடுகளைப் போலக் குதிக்க
அது ஒரு போர்க்களத்தின் முன்மாதிரியாகிறது
அங்கே வாழ்வும் ஆன்மாவும்
சண்டையிட்டுக் கொண்டிருந்தன
இரண்டுமே ஜெயித்து விட்டன.
பக்தி
அவர்கள் எப்பொழுதுமே
பூக்களை நேரடியாக ஜாடிக்குள் வைத்து
அந்த ஜாடியை கூடத்தின் இருண்ட, குளிர்ச்சியான இடத்தில்
பூச்செண்டு நீடித்திருக்கும் பொருட்டு,
வைக்கின்றனர்
அவர்கள் இறந்து விடுகின்றனர்
அந்த சிறிய சாம்பல் தாழிகள் தம் சாம்பலுடன் நிற்கின்றன
கூடத்தில் இருண்ட குளிர்ச்சியான இடத்தில்
ஒரு குருட்டுச் சிலந்தி
அவைகளைப் பார்த்துக் கொள்கிறது, அதன் பொருட்டு. . .
இல்லையென்றால்
இது எல்லாமும் மிகவும் சோகமானதாகிவிடும்.
யோகாசனம்
எல்லாக் கவிதையும் ஏறத்தாழ
ஐந்நூறு டிகிரி செண்டிகிரேட்
கவிஞர்கள் தீப்பற்றுவதில்
மாறுபடுகின்றனர்
எரிசாராயத்தில் நனைக்கப்பட்டவர்கள்
பற்றிக் கொள்கின்றனர் உடனே,
அவர்கள் என்னவாக இருப்பார்கள் அவர்களின் நோயின்றி
அவர்களின் நோயே அவர்களின் ஆரோக்கியம்.
வைக்கோல் வயிறுகள் அவர்கள் எரிகின்றனர்
நீட்ஷேவை அவர்கள் படிப்பதில்லை
உங்களை எது கொல்வதில்லையோ
அது திடப்படுத்துகிறது.
அவர்கள் கனல்கின்றனர்
ஓசையுடன் எரிகின்றனர்
இருப்பினும் ஒரு மோசமான யோகி மட்டுமே
தன் கால்களை
எரியும் கங்குகளில் சுட்டுக் கொள்கிறான்.
எலும்புக் கூடுகள்
பசுமையாகிக் கொண்டிருந்தவர் அனைவரும்
கெட்டிப்பனியாக மாற்றப்படுவர்.
பறக்கத் தயாராக இருந்தவர்கள் எல்லோரும்
La Brea வின் ஓநாய்களைப் போல தார்க்குழிகளில் உறங்கட்டும்
கூவி அழைத்தவர்கள்
பேசப்படாத விளக்க வாக்கியத்தின் இறுதியில் ஒரு ஆச்சரியக்
குறியாக மாற்றப்படட்டும்.
வருடிக் கொண்டிருந்தவர்கள்
முள்ளாள் கிழிக்கப்படட்டும்.
அதனால் பனிக்கு கூடுதலாக இன்னும் சில ஆயிரம்
பைட்டுகள்
அதனால் தாரின் மீது பச்சைப்பாசி உருவாகும்
ஒவ்வொரு பழத்தாங்கியிலும் ஒரு சிறிய ஆடு இருக்கும்படி
அதனால் மௌனம் சிறிது கீச்சொலியிடட்டும்
அதனால் முட்கள் வருந்தக் கூடும்.
பிரான்சிஸ்கோ பிசாரோ
தான் தோற்கடித்தவர்களின் தலைகளை
குச்சிகளில் குத்தி Plaza de Armasவில் காட்சிக்கு வைத்தான்
ஜுன் 26, 1541.
கோடறிகளாலும் போர்வாள்களாலும்
முடமாக்கப்பட்டு இரத்தமிழந்து இறக்க
வெண்ணிற மேல் அங்கியில்
புனித ஜேம்ஸின் சிவப்புச் சிலுவையுடன்
ஒரு அவசர சவச்கிடங்கினால்
தலை வெட்டப்படுவதிலிருந்து தப்பித்தான்.
நிகழ்ச்சி இறுதியில்
நூற்று இருபது வருடங்களுக்கு பிறகு
வகுக்கப்பட்டான்: அவன் மண்டையோடு ஒரு காரியப் பெட்டியிலும்
அவன் எலும்புகள் குழந்தைகளின் எலும்புகளுடனும் கலந்து போய் ஒரு மரச்சவப் பெட்டியில்
நிலவறை ஒன்றில் சூழப்பட்டது சுவர்களால்
திருச்சபையில் முன்னூறு வருடங்களாய்
பாடம் செய்யப்பட்ட வேறொரு சவம்
அவன் பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள்
ஞாபகத்திலிருந்து தொலைந்து போகட்டும்
மீண்டும் ஒவ்வொன்றும் நிகழும்பொருட்டு.
வெண்சஸ்லா சதுக்கம்
டிசம்பர்
இரவு பதினொரு மணி
மௌனத்தின் பனிப்பகைப்படலம் சோடியம் ஒளியால் மெருகிடப்பட்டு பூமியை அணைத்துக்கிடக்கிறது.
குதிரை மீதமர்ந்த இளவரசனின்
வெண்கலக்கண் நடந்து செல்லும் காவல்காரர்களைப்
பின் தொடர்கிறது
இங்குமங்கும் நிழல்வெளிக் கோட்டுருவம்
கடந்து செல்கிறது
சற்றே நிஜமற்றதைப் போன்றது.
ஆனால் தன் இலைகளை உதிர்க்க மறந்த லின்டன் மரத்திலிருந்து
ஒரு கருப்பு பறவையின் வலுவான குரல்.
பாடல் உயர்ந்து சுரங்கப்பாதையில் விழுகிறது.
டிசம்பரின் மனம் பிளவுபட்ட
ஒரே கருப்புப் பறவையின் பாடல்
வலுவான என்றென்றும் நீடித்திருக்கக் கூடியது
ஒரே ஒரு மனம் பிளவுபட்ட கருப்புப் பறவை.
ஆம், வாஸ்தவமாக
ஒரு பாடல்.
நசுங்குதல் பற்றிய நோய்க்கூட்டுத் தொகுப்பு
ஒரு சமயம் அப்பொழுது, குளிர்கால இருட்டில்
கான்க்ரீட் கலவை இயந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தேன்
அதன் பல்சக்கரங்கள் இபடான் தேசத்து சலித்துப் போன எலியின் பற்களைப் போல,
கையுறைக்குள் இருந்த கையை நசுக்கின. விரல் எலும்புகள்
நீங்கள் அடிக்கடி கேட்டிராத சில விஷங்களைக் கூறின
பிறகு அது அமைதியானது,
காரணம் அந்த எலி கூட பீதியடைந்துவிட்டது.
அந்த கணத்தில்
நான் உணர்ந்தேன் எனக்கொரு ஆன்மாயிருந்ததென்று.
அது மிருதுவாகவும், சிவப்பு பட்டைக்கோடுகளுடனும் இருந்தது
மேலும் காயத்திற்கான சல்லடைத் துணியால்
தன்னைச் சுற்றிக் கொள்ள விரும்பியது.
காரின் இருக்கையில் என்னருகே அதை வைத்துக் கொண்டு
ஆரோக்கியமான கையினால் காரைச் செலுத்தினேன்
மருந்தகத்தில் வலி தெரியாதிருப்பதற்கான ஊசிகள்
குத்தப்படும் பொழுதும்
தையலிடப்படும் பொழுதும்
மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய மேஜையின்
துருப்பிடிக்காத எஃகுக் குமிழியினை
ஆன்மா தனது தாடைகளால் இறுகப்பற்றிக் கொண்டது.
இப்பொழுது வெண்ணிறப் படிகமாய் இருந்தது
ஒரு வெட்டுக்கிளியின் தலையுடன்.
விரல்கள் குணமாயின.
ஆன்மா மாறிற்று முதன்முதலில்
ஆறிவரும் புண்ணின் திசுவாக
பிறகு ஒரு வடுவாக,
அதிகம் புலப்படாமல்.

miroslav_holub1923-1998

No comments:

Post a Comment